31/5/2010
மேட்டுப்பாளையம்:சிறுமுகை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 21ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமை வகித்தார்.
அதிகம் மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணாவ,மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகை வழங்கி, கவிஞர் வைரமுத்து பேசியதாவது:தன்னைப் போல் துன்பம் அடையக்கூடாது என்று நினைப்பவர் தான் உயர்ந்த மனிதர். கொடையில், சோறு, அரிசி, நெல் கொடுப்பது என மூன்று வகை உள்ளது. சோறு அன்றைய பசியையும்; அரிசி நாளைய பசியையும் போக்கும். ஆனால் நெல் நிலத்தில் விளைந்து பன்மடங்கு பலன் தரும். அதேபோல மாணவர்களாகிய நீங்கள் விதை நெல்லைப் போல் இருக்க வேண்டும்.கல்வி தான் சமுதாயத்தை மேம்படுத்தும். மதமும், அரசியலும் சமுதாயத்தை மேம்படுத்தாது. கல்வி தான் ஒரு மாணவருக்கு அழகை கொடுக்கும். கல்வியின் மூலம் மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசும்போது ""மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்,'' என்றார்.மேலும்
""தமிழகத்தில் உள்ள 53 ஆயிரம் பள்ளிகளில், 1.45 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் வியாபார நோக்குடன் செயல்படக் கூடாது என்பதற்காக, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. எவ்வித கல்விக் கட்டணம் வாங்காமல் இப்பள்ளி நிர்வாகம், 1,400 மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்கிறது. இது அல்லாமல் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறது. மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
முன்னதாக ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வரவேற்றார். கோவை ஐ.ஜி., சிவனாண்டி வாழ்த்திப்பேசினார். அதிக மதிப்பெண் பெற்ற 4,500 மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.