
TN69ABI.com செப்டம்பர் 27,2010
"பந்திப்பூரில் இரவு போக்குவரத்து தடை நீக்க சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவேன்'
ஊட்டி:"தேசிய நெடுஞ்சாலை 67ல், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க, சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாக' முன்னாள் பிரதமர் தேவகவுடா ஊட்டியில் உறுதியளித்தார்.மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று ஊட்டி வந்தார். அவருக்கு, நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடந்த ஒக்கலிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தேவகவுடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:நீலகிரியில் உள்ள கன்னட மக்கள், கர்நாடக மாநிலம் ஹாசன், மாண்டியா பகுதிகளிலிருந்து வந்து இங்கு வசிப்பவர்கள். இவர்கள் யாரும் பணம் படைத்தவர்கள் இல்லை. அடிப்படையில் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளனர்.நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் மூன்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக மேட்டுப்பாளையத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் என கோரியுள்ளனர். இது குறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவேன்.கர்நாடக மாநில பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நீலகிரியில் வசிக்கும் கன்னட மக்களுக்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் கல்வி கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. மேலும், ஒரு மாநில மக்களுக்காக பிற மாநிலங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது சிக்கல். இரு மாநில அரசுகளும் உடன்பட்டால் தான் முடியும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும்.நீலகிரியில் உள்ள கன்னட மக்கள் பயன்பாட்டுக்காக நிலம் வழங்க தமிழக அரசிடம் நீங்கள் முறையிடுங்கள். இது குறித்து அவசியம் ஏற்பட்டால் முதல்வர் கருணாநிதியிடம் நான் பேசுவேன். நான் விவசாயியாக வாழ்க்கையை துவங்கி, பிரதமராக முன்னேறினேன். நான் அரசியலுக்கு வந்தது விபத்து. அதே போல எனது மகன் குமாரசாமியும் திரைப்படங்களை தயாரித்து வந்தார். எதிர்பாராத விதமாக அவரும் அரசியலுக்கு வந்து விட்டார்.இவ்வாறு தேவகவுடா பேசினார்.