Friday, July 30, 2010

வெள்ளியங்கிரி யாத்திரை

‘பூலோக கயிலாயம், தென்கயிலை, வெள்ளிமலை, வெள்ளியம்பலம் என பல திருநாமங்களால் அழைக்கப்
படும் வெள்ளியங்கிரியே, தட்சிண கயிலாயம்’ என்று ஈசன் உரைத்த செய்தியை நந்தி தேவர் முருகனுக்குச் சொல்ல, முருகன் நாரதமுனியிடம் தெரிவித்தார். அப் புனிதத்தலத்தை தரிசிக்க ஆவல்கொண்ட நாரதர், கொங்கு மண்டலத்தின் மூலஸ்தானமாக விளங்கும் வெள்ளியங்கிரியில் ஏறி பெருமானையும், அம்மையையும் தரிசித்தார். பின்னர், காஞ்சி நதியில் தீர்த்தமாடி, கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அவர் ஸ்தாபித்த லிங்கம், நாரதேஸ்வரர்.
காலவ முனிவர் சிவலிங்க உபாசனைக்குத் தகுந்த இடமாகக் கருதியது வெள்ளியங்கிரியைத்தான். காஞ்சி நதியின் கரையில் இவரும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பஞ்சாட்சர மந்திரத்தை பதினையாயிரம் முறை ஜெபித்து தவமியற்றினார். இவர் ஸ்தாபித்த லிங்கம் காலவேஸ்வரர்.
இவ்விதம் ஈசனின் திருமுடியிலிருந்து உருகி
யோடி வரும் காஞ்சி நதியோரத்தில் நடந்தால்
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் வரைக்கும் மாமுனிகள்
ஸ்தாபித்த ஏராளமான லிங்கங்களை தரிசிக்கலாம்.
வெள்ளியங்கிரியில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்த பயன் என்கிறது பேரூர் புராணம். ஜனவரி தொடங்கி மே வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இம்மலைக்கு வருகிறார்கள். இக்காலத்தில், ஏராளமானோர் அன்னதானம் செய்வார்கள். இதற்கென்றே, அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம் என 10க்கும் மேற்பட்ட மடங்கள் உள்ளன. இங்குவந்து 200க்கும் மேற்பட்ட அன்னதானக் குழுக்கள் பக்தர்களின் பசி போக்குகிறார்கள்.
இப்போது நாம் இருப்பது நான்காம் மலை. இது அநாகதம் என்ற வாயுவின் அம்சம். இதன் தொடக்கம் மிகக்கடுமையானது. இதை முழங்கால்திட்டு என்பார்கள். ஒவ்வொரு அடியையும் முழங்கால் அளவுக்குத் தூக்கிவைத்து நடக்கவேண்டும். சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள முழங்கால் திட்டைக் கடந்துவிட்டால் யாத்திரையில் முக்கால்பாகத்தை தாண்டிவிட்டதாகக் கருதலாம். அடுத்து சீதை வனம். அரிய மூலிகைகள் அடர்ந்த காடு. காயசித்தி, யோகசித்தி தரும் மரங்கள், நரை, திரை, மூப்பு ஒழித்து சிரஞ்சீவியாக வாழச்செய்யும் மரங்கள், மாங்கிசபேதி, அங்கிசபேதி, அயபேதி, அன்னபேதி மூலிகைகள், நவமணிகள் விளையும் கொடிகள் மிகுந்த இந்த சீதைவனத்தில் ஸ்படிகம் போன்ற அரிய கற்களும் உள்ளன. இம்மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஏமகிரியில் ஒரு தாமரை ஓடை உண்டு. அதில் மூழ்கி எழுந்தோர் சகல சித்திகளும் பெறுவர். அதனருகே உள்ள பால்கிணற்று நீரை அள்ளி அருந்தினால் ஆறு மாதங்கள் அன்ன, ஆகாரமின்றி வாழலாம் என்கிறது பேரூர் புராணம். இம்மலைவாழ் சித்தர்கள் இவ்விதம்தான் பசியை வென்றார்கள் போலும்.
வெள்ளியங்கிரியில் சீதை வனம் வந்ததெப்படி..?
சீதை வனம் மட்டுமல்ல... இம்மலையின் சரிவுப்பகுதியில் அனுமன் நதியும், ராமர் ஓடையும் கூட உண்டு. இந்த தொடர்பை உணர, கொஞ்சம் ராமாயணத்தை உணரவேண்டும். மாரீசன் பொய்மான்
வேடமிட்டு ஓட, அதன்மீது ஆவல்கொள்கிறாள் சீதை. ராமன் மானைத் தேடிப்போக, இலக்குவன் ராமனைத் தேடிப்போக, தனித்திருந்த சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன். ஓடியது பொய்மான் என்பதை உணர்ந்த ராமனும், இலக்குவனும் சீதையைக் காணாமல் தவித்து சுதீக்ஷனனிடம் யோசனை கேட்கிறார்கள். அவன், இரளி மலைக்
குன்றத்தில் உள்ள பெண்தபசி சபரியிடம் அனுப்புகிறான். சபரி சுக்ரீவனை அறிமுகப்படுத்து
கிறாள். சுக்ரீவனின் அமைச்சனான அனுமனின் யோசனைப்படி, வாலியை வதம்செய்து அவனின் 70 வெள்ளம் சேனையை வசப்படுத்துகிறான் ராமன். அந்த சேனையை நான்கு பிரிவுகளாக்கி நான்கு திசைகளுக்கும் அனுப்பி சீதையைத் தேடப்பணிக்கிறான். தென்திசைக்குச் சென்ற படையில் இடம்பெற்ற அனுமன், விந்தமலை, ஏமகூடம்,
தண்டகமலை, பாண்டுமலை, சந்திரகாந்த மலை தாண்டி வெள்ளியங்கிரியிலும் தேடியலைந்தார். அனுமனின் கண், கருத்து, காட்சி எல்லாவற்றிலும் சீதையே இருந்தாள். அவ்வித நோக்கத்தோடு
அனுமன் வந்திறங்கிய இடமே சீதை வனம்.
இந்திரஜித்தின் பாணத்தால் இலக்குவன் நிலை
குலைந்து விழுந்த தருணத்தில், சாம்பவனின் ஆலோசனையின் பேரில் சஞ்சீவி மூலி கையை தேடிஅலைந்த அனுமன், அப்போதும் இந்த சீதை வனத்திற்கு வந்திருக்கலாம் என்று யூகிக்
கிறார்கள் கம்பன் ஆர்வலர்கள். மூலிகை வாசனை, குளுகுளு காற்றால் களைப்பு மிரண்டோடுகிறது. ஏற்ற, இறக்கங்கள் மிகுந்த பகுதி என்றாலும் மெல்லிய காற்று உடலில் பரவுவதால் பயணம் இதமாகத்தான் இருக்கிறது. பள்ளப் பகுதி தாண்டி சற்று சிரமமான ஒரு மேடு ஏறினால் சீதை வனம் முடிகிறது. மேட்டின் முகப்பில் ஒட்டர் சமாதி. வெள்ளியங்கிரி லிங்கேஸ்
வரனை முதன்முதலில் அடையாளம் கண்ட மனிதர். இவர், சிவபக்தியும் ஆசாரமும் கொண்ட லிங்காயத்தார் எனப்படும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர். மேய்ச்சல் தொழில் செய்த இவர் ஒருமுறை வெள்ளியங்கிரி மேல்மலை குகையில் ஆடு, மாடுகளை அடைத்து பட்டி போட்டிருந்தார். அப்போது, மேய்ச்சல் முடித்து ஆங்காரத்தோடு வந்த ஒரு காராம் பசு, பட்டியின் கதவை நெட்டித்தள்ளி, கன்றுக்கு பால் கொடுத்தது. தாயன்பு கிடைத்த மகிழ்வில் துள்ளிக்குதித்த கன்றுவின் கால்குளம்பு அருகில் இருந்த ஐம்முகம் கொண்ட புற்றின் மேல் இறங்கியது. அப்புற்றுக்குள் கன்றின் கால்குளம்பு சிக்கிக்கொள்ள, தாய்ப்பசு மனம் பொறுக்காமல் அந்த புற்றை தன் கொம்புகளால் குத்திப் பெயர்த்தது. அத்தருணம், புற்றுக்குள் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இதைப் பார்த்து அதிர்ந்த ஒக்கலிகர், புற்றை முழுதாகத் தோண்ட... குளம்படியாலும், கொம்படியாலும் சிதைந்த ஐமுகலிங்கங்கள் வெளிவந்தன. இச்செய்தியை ஒக்கலிகர் வழியாக உலகம் அறிந்தது. அந்த ஒக்கலிகரே காலப்போக்கில் ஒட்டரானார். ஈசனின் திருவடியிலேயே கிடந்து காலம் கழித்த ஒக்கலிகர் உடல்நீத்த இடம்தான் ஒட்டர் சமாதி. கரடுமுரடான மலையில் கற்களைக் கொண்டு நடைபாதை அமைத்தது இவர்தான். அதுமட்டுமல்ல, களைப்பால் திணறும் பக்தர்களுக்கு உரமூட்டி ஈசனின் சந்நதிக்கு கொண்டு சேர்ப்பதும் இந்த புனிதர்தான்.

Wednesday, June 30, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்தி உலக அரங்கில் தமிழ்தேசியத்தை அடுத்தநிலைக்கு முன்னெடுத்துச் செல்லும் கலைஞருக்கு வாழ்த்துக்கள்



























Friday, June 11, 2010

கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

31/5/2010
மேட்டுப்பாளையம்:சிறுமுகை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 21ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமை வகித்தார்.

அதிகம் மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணாவ,மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுத்தொகை வழங்கி, கவிஞர் வைரமுத்து பேசியதாவது:தன்னைப் போல் துன்பம் அடையக்கூடாது என்று நினைப்பவர் தான் உயர்ந்த மனிதர். கொடையில், சோறு, அரிசி, நெல் கொடுப்பது என மூன்று வகை உள்ளது. சோறு அன்றைய பசியையும்; அரிசி நாளைய பசியையும் போக்கும். ஆனால் நெல் நிலத்தில் விளைந்து பன்மடங்கு பலன் தரும். அதேபோல மாணவர்களாகிய நீங்கள் விதை நெல்லைப் போல் இருக்க வேண்டும்.கல்வி தான் சமுதாயத்தை மேம்படுத்தும். மதமும், அரசியலும் சமுதாயத்தை மேம்படுத்தாது. கல்வி தான் ஒரு மாணவருக்கு அழகை கொடுக்கும். கல்வியின் மூலம் மாணவ, மாணவிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசும்போது ""மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே, பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்,'' என்றார்.மேலும்

""தமிழகத்தில் உள்ள 53 ஆயிரம் பள்ளிகளில், 1.45 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தனியார் பள்ளிகள் வியாபார நோக்குடன் செயல்படக் கூடாது என்பதற்காக, கல்விக் கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. எவ்வித கல்விக் கட்டணம் வாங்காமல் இப்பள்ளி நிர்வாகம், 1,400 மாணவர்களுக்கு இலவச கல்வியை அளிக்கிறது. இது அல்லாமல் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வருகிறது. மாணவர்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். படிக்கும் போதே பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
முன்னதாக ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வரவேற்றார். கோவை ஐ.ஜி., சிவனாண்டி வாழ்த்திப்பேசினார். அதிக மதிப்பெண் பெற்ற 4,500 மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.

Wednesday, June 2, 2010

ஒக்கலிகர் உனுசுவார் குலம்

நன்றி தினமலர்: மே 29,2010,01:00 IST

உத்தமபாளையம் அருகே ஆனைமலையன் பட்டியில் ஒக்கலிகர் உனுசுவார் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட மல்லையசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. முதல் ஐந்து நாட்களும் கணபதி பூஜை, அர்த்த ஜாம பூஜை, உச்சிகால பூஜை, சிலைகள் ஜலாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

ஜீவ சடங்குகள்,சுவாமி சிலைகளையும், கலசங்களையும் கருவறையில் எழுந்தருளச் செய் தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு மல்லைய சுவாமி மற்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமாள், மகாவிஷ்ணு, அக்கு மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நீலகண்டன் நம்பூதிரி, ஈஸ்வரன்போத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்

நன்றி தினமலர்: மே 30,2010,10:18 IST

கோவை: ""விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்'. நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது, என்று மயில்சாமி அண்ணாதுரை பேசினார். ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:


தாய்மொழிக்கல்வி தான் சிறந்தது; இந்த தாய் மொழிக்கல்வி தான் என்னை சந்திராயனுக்கு கொண்டு சென்றது. "விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்' . நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது. இந்தியாவில் கடந்தாண்டு 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 27 சதவீதம் பேர் கூட உண்மையான பொறியாளராக வருவதில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பொறியாளர் படிப்பில் வெறும் பாடத்திட்டத்தை மட்டும் படித்தால் போதாது; முதலாம் ஆண்டில் இருந்தே செய்முறை பயிற்சி மிக அவசியம். ஒவ்வொருவரிடமும் படிப்புடன் திறமை உட்பட அதிக தகுதிகள் எதிர்பார்க்கின்றனர். அந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே சிறந்த சாதனையாளர்களாக வருகின்றனர். எந்த துறையில் சாதனை பெற்றாலும், மனித நேயத்தை மறந்து வாழக்கூடாது. சுயசிந்தனை ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுய சிந்தனையால் எதையும் சாதிக்க முடியும். பொதுநலக் கொள்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து பேசியதாவது: சாதிக்க வேண்டுமென்றால் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, சாதனையாளராக வரவேண்டும். அதற்கு லட்சியத்தை முன் வைக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மாற்றும் செய்து ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கிய கல்வியை உருவாக்க வேண்டும். ஒன்று, கலாச்சாரம், பாரம்பரியம் <உள்ள பாடம் இருக்க வேண்டும். இரண்டு, அவற்றை மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று, இந்தியாவை பற்றி மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு, எதிர்காலத்தில் நம்மை எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். ஐந்து, தொலை நோக்குடன் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், இந்த ஐந்து அம்சங்களை மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தான் நாடு வல்லரசாக மாறும். இன்றை இளைஞர்கள் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து வருகின்றனர். வேலைக்கு சேர்ந்ததும், அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கின்றனர். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.


விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி வரவேற்றார். ராம்ராஜ் காட்டன் கம்பெனி உரிமையாளர் நாகராஜ், ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை தலைவர் ராமசாமி, விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு தலைவர் ரங்கசாமி மற்றும் பலர் பேசினர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணிக்கராஜ், ரீனா, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி காஞ்சனா, இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுத்த நான்கு விவசாயிகள் ஆகியோரை விழாவில் கவுரப்படுத்தினர். 4 ஆயிரத்து 500 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டது.


கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கத் தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.

Monday, March 15, 2010

சங்க விடுதியில் தங்கிய ஒருவரின் வலைப்பதிவு

வறுமைக்கு வந்த காதல் என்ற பெயரில் அவர் எழுதியது.
தூரல் நின்று விட்டு இருந்தது.நிசப்தமான அந்த இரவில்,சீரான இடைவெளி விட்டு தூங்கி தூங்கி வ்ழித்தேன்.தொடர்ந்து தூங்கினால் இருக்கும் அலுப்புக்கு எழுந்திருக்க முடியாமல் போகலாம்.அப்புறம் அவமானப் பட வேண்டியது தான்.வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை.அதற்குள் ஒரு வருடத்தில் ஏற்படும் களைப்பு மனதில்.காலையில் இருந்த தைரியம் இப்பொழுது இல்லை.நான் பட்டம் வாங்குவதெல்லாம் நடப்பது போல தோன்றவில்லை.ஆனால் முடிந்தளவு முயற்சி செய்து பார்ப்போம்.எது நடந்தாலும் பரவாயில்லை.

காலை நான்கு மணியை கடந்து இருந்தது.மெதுவாக கீழிறங்கி வந்தேன்.குளியலறையை சத்தமின்றி திறந்து,தேவையான சுத்தங்களை செய்து கொண்டேன்.நல்ல நேரம் குளியலறை வெளியே இருந்தது.துணிகளை நன்றாகப் பிழிந்து மறுபடியும் அதையே போட்டுக் கொண்டேன்.பாதி ஈரம் தான்.நடக்க நடக்க காய்ந்து விடும். சுபாஷ் என்னுடன் பத்தாம் வகுப்புவரைக் கூடப் படித்தவன்.செண்ட்ரல் பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கிறான்.அவ்னைப் பார்த்து வேலை கிடைக்குமா என்று கேட்க வேண்டும்.இன்னொருவன் பாலா எனக்கு இரண்டு வருட சீனியர்.அவன் வேன் ஓட்டுகிறான்.அவனிடம் ஏதாவது ஐடியா கேட்க வேண்டும்.இவன் இருப்பது அம்பத்தூர்.

போட்டிருக்கும் துணி காய்வதற்காவதும் நான் நடக்க வேண்டும்.

அடையாரிலிருந்து மைலாப்பூர் வழியாக செண்ட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.ஒரு வழியாக சுபாஷ் வேலை செய்யும் 'டெல்லி தர்பார்'ஐ அடைந்தேன்.மூன்று நட்சத்திர ஹோட்டல் என்று சொன்னான்.நல்ல உணவுக்கு வழி செய்தான்.

சரி விஜய்,காலேஜ் சேந்துட்டயா?

ம்.சேந்துட்டேன்.ஆனா படிக்க முடியுமாத் தெரியல.

ஏண்டா?

தங்குறதுக்கு எடமில்ல.சாப்பாடுக்கு வழியில்ல.ஒரு நா கடக்கறதுக்குள்ள உயிர் போகுது.இதுல எங்கடா நாலு வருசத்த ஒப்பேத்துறது.

ஏய் அப்படியெல்லாம் சொல்லாதடா.பாரு நான் படிக்க பயந்துட்டு ஸ்கூல விட்டுட்டு ஓடினேன்.இப்ப என்னாச்சு? எச்சி எலை எடுக்கிறேன்.எதாவது யோசிப்பம்டா.

ஆமா...,நீ எங்கத் தங்குற?

அத ஏண்டாக் கேட்குற? ஒரு கொடோன் மாதி இருக்கும்.ஒரே டாய்லெட்.கிட்டத் தட்ட இருபது பேரு தங்குறோம்.இதில ஃப்ரண்ட்ஸ்கள தங்க வெச்சா, சண்டைக்கு வருவானுங்க.

பரவாயில்லடா.ஏதாவது ஈவ்னிங் ரெஸ்ட்டாரண்ட் வேல,இல்ல நைட் செக்யூரிட்டி வேல ஏற்பாடு பண்ண முடியுமா?

தேடிப் பாத்தாதான் தெரியும்.சரி வா ட்ரைப் பண்ணலாம்.

உடனே போக வேண்டிய இடங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டான். மாலை நேர ஹோட்டல்கள், அடுக்கு மாடி வீடுகள் இப்படியென லிஸ்ட் போட்டுக் கொண்டான்.

விஜய், இன்னக்கி எனக்கு லீவ் தான்.முடிஞ்சளவுத் தேடலாம். நாளக்கி நீயாத் தேடு. எதாவது வழி கிடைக்கும்.

சரிடா.

தேடினோம்.தேடினோம்..தேடினோம்...

ம்கூம்.ஒன்றும் அமையவில்லை.துணி காஞ்சதுதான் மிச்சம். மாலையானதும் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு, என் இருப்பிடம் பெசண்ட் நகர் கடற்கரைக்கு வந்தேன். நேற்று போலவே இன்றும் இரவு பன்னிரெண்டு வரைக் கடற்கரை, அதற்கு மேல் சுரேஸ் வீட்டு மொட்டை மாடி.காலை நான்கு, நான்கரை மணிக்கு தெருவோடு.தொடர்ந்து மூன்று நாட்கள் இதே வாழ்க்கை. உடம்பு அலுத்து விட்டது. எங்காவது தனிமையில் ஓ வென்று அழனும் போல் இருந்தது. நம்பிக்கை தளர்ந்து கொண்டு இருந்தது.

மறுபடியும் சுபாஸை சந்தித்தேன். சாதாரணமாகப் பேசினாலும் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தது. அவனுக்கு என்னைப் பார்க்க கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லி, சென்று விட்டான். தண்ணீர் குடித்ததும் கவலை மட்டுப் பட்டது. சிறிது நேரம் கழித்து வந்தான்.

விஜய், எனக்கொரு இடம் தெரியும், தங்குறதுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூவாதான். ஆனா அது எங்க ஒக்கலிகர் கவுண்டர் சங்கம்.

எப்படிடா? யாராவது என்ன ஜாதின்னு கேட்டா, நான் என்ன சொல்றது.

கவுண்டருன்னே சொல்லு. நானே வந்து எனக்கு சொந்தமுன்னு சொல்றேன். எங்க ஊர்ல இருந்து எப்பாவதுந்தான் ஆளுங்க வரவாங்க. அதனாலப் பிரச்சினை இல்ல. அப்படியே யாராவதும் வந்தாலும், அப்பா யாருன்னு விசாரிச்சா எங்க அப்பா பேரையே சொல்லு. அதெல்லாம் ஒன்னும் கண்டு பிடிக்க முடியாது.

சரிடா. ஒரு நைட்டாவதும் நல்லாத் தூங்குறேன்.

ஏனென்றால் என்னை இன்னாரென்று கண்டுபிடிக்க குறைந்த பட்சம் ஒரு வாரமாவது ஆகலாம். அது வரையாவதும் சற்று நிம்மதியாக இருக்கலாமென்று தைரியமாக ஒத்துக் கொண்டேன். தியாகராய நகர் பசுல்லா சாலையில் ஒக்கலிகர் சங்கம் இருந்தது. அமைதியான இடம். சுபாஸ், என்னை தன் சகோதரனென்றும், ஹாஸ்டல் கிடைக்கும் வரை இங்கு தங்கிக் கொள்ள அனுமதி வாங்கி விட்டான். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் தான் வாடகை. எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டான்.

எத்தனை உத்தமமான நண்பன். படிக்கும் போது பாடங்களை சொல்லித் தந்ததைத் தவிர வேறு எதுவும் அவனுக்கு செய்ததில்லை. என் சொந்த ஊரில் அதே கவுண்டர் இன மக்களில் சிலர் சாதியைக் காட்டி என்னை துன்புறுத்தகையில் இவன் இங்கு என்னை சொந்த சகோதரனென அரவனைத்துக் கொண்டதை நினைத்த பொழுது கண்களில் கண்ணீர் ஒத்தடம் கொடுத்தது.

ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. மேல் தட்டு மக்களில் யாரோ ஒரு சிலர் தான் அறியாமல் அடுத்தவரை வதைக்கிறார்கள். சுபாஸைப் போல பல நல்ல மனிதம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அன்று வரை அறியாமையால் சாதி முறையிலான என் கோபம் தனி மனிதக் கோபமாக மாறியது. அதாவது அதுவரை எனது ஊரின் ஒட்டு மொத்தக் கவுண்டர்களின் மேல் இருந்தக் கோபம் ஒரு சில தனிப்பட்டவர்கள் மேல் திரும்பியது.

சங்கம் என்றால் ஒரு பெரிய விடுதி போல கிடையாது.ஒரு இரண்டு படுக்கை அறை கொண்ட பெரிய வீடு.நுழைவாயிலில் ஒரு சிறிய ஆபிஸ். பெரிய ஹால். ஒரு பத்து பேர் படுக்கலாம். முக்கியமானவர்களுக்கு மட்டும் படுக்கை அறை. ஒட்டு மொத்த அலுப்பு என்னை உலுக்கிப் போட்டதில்
மாலை ஏழு மணிக்கெல்லாம் நன்றாகத் தூங்கி விட்டேன்.ஒன்பது மணி இருக்கும், யாரோ எழுப்பினார்கள்.விஷயம் கேட்டதற்கு, உங்கள் ஊரிலிருந்து

மனோகரன் வந்திருப்பதாகவும், பார்க்க வேண்டுமென்று சொன்னதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மனோகரன்....?சுபாஸின் ஊர் ஓடைப்பட்டி. மனோகரன் அ.தி.மு.க ஆவில் முக்கியமான நபர். எம்ஜியார் அவர் வீட்டில் உணவு உண்டதாக சொல்லக் கேள்விப் பட்டிருக்கேன்.பெரும் புள்ளி. தலை தட்டாமலை சுற்றியது. தூக்கம் போன இடம் தெரியவில்லை.கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாப் போல தலையை தொங்கப் போட்டுக் கொண்டு பலி பீடத்தை நோக்கி நடந்தேன்.

என்ன என்ன கேட்கப் போறாரோ, நெஞ்சு திக் திக்கென்று இருந்தது.

நீ யாரு மகப்பா? கேட்கும் பொழுதே ஆளை விட்டால் போதும் ஓடிவிடத் தோன்றியது.
யார் மகன், அப்பா பேரு இதெல்லாம் ஓரளவு உளறி விட்டேன். ஆனால் அடுத்தடுத்து அவர் கேட்டக் கேள்விகள் ஒன்றும் விளங்காமல், பேயடித்தது போல நின்று கொண்டேன்.

படாரென எழுந்த அவர், என் தோளில் கை வைத்து அழுத்தி...,

Wednesday, March 10, 2010

வாழ்த்துகிறோம்


ஒக்கலிகர் புல்லட்டின் செப்டம்பர்-அக்டோபர் 2009

நமது சமுதாயாத்தை சேர்ந்த கம்பம் N.ராமகிருஷ்ணன் 18.8.2009 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 57,375 வாக்குகள் வித்தியாசத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.இவருக்கு கோவை ஒக்கலிகர் சங்கத்தின் சார்பிலும் நமது ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பிலும் எங்கள் உளங்களிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.