Saturday, January 16, 2010

சிறு தானியங்கள்

     சிறு தானியங்கள் தான் இனி எதிர்காலம்
வெறும் பேச்சல்ல... வியக்க வைக்கும் சாதனை!
"எங்களை கம்பும் கேழ்வரகும் சாப்பிடச் சொல்கிறீர்களே... நாங்கள் என்ன இழி பிறவிகளா...?
எங்களுக்குத் தேவை அரிசி... தமிழக அரசே! ரேஷனில் ஒழுங்காக அரிசியை விநியோகம் செய்!"
-சமீபத்தில் புதுக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஒலித்த கோஷம் இது.
இவர்களைப் பொறுத்தவரை கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களைச் சாப்பிடுபவர்கள் இழிபிறவிகள்...!
ஆனால், பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?
"ஒரு காலத்தில், 'ஏழைகளின் உணவு'என்று சொல்லப் பட்ட கம்பு,
கேழ்வரகு, சோளம், தினை எல்லாம் இன்று, வசதியானவர்களின் உணவாக மாறியுள்ளது. ஆந்திர மாநில முதல்வர், வேளாண் துறை அமைச்சர், செயலர் போன்றவர்கள் எங்களுடைய சொசைட்டியால் நடத்தப்படும் சிறுதானிய கடைகளில், சிறுதானியங்களை வாங்கிச் சென்று, சமைத்து உண்கிறார்கள்" என்று பெருமையோடு சொல்கிறார் 'டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி'யின் இயக்குனர் சதீஷ்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆந்திர மாநில கிராமங்களில் சிறுதானியங்களை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது இந்த 'டெக்கான் டெவலப் மெண்ட் சொசைட்டி'. இதனுடன் இணைந்து, 'சிறு தானியங்கள்தான் இனி எதிர்காலம்'என்ற தலைப்பில் ஐதராபாத் நகரில் இரண்டு நாள் கலந்தாய்வு கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது தேசிய ஊரக வளர்ச்சி மையம். நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத் தில்தான், சிறுதானியங்களின் பெருமைக்கு கட்டியம் கூறினார் சதீஷ்.
உடல் பிரச்னைக்கு மட்டுமல்ல... உலக பிரச்னைக்கும்...
''சிறுதானியங்களில்தான் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் நாம் ஒதுக்கத் தொடங்கியதும் நம் மூளையும், உடலும் பலமிழந்து போய்விட்டது. அதனால் தான் இன்று வகை, வகையான நோய்கள் மனிதகுலத்தை வாட்டுகின்றன. 'காலம் திரும்பவரும்'என்பதுபோல 'சிறு தானியங்கள்தான் சத்துக் குறைவான வர்களுக்கு கண் கண்ட மருந்து'என மருத்துவர்களே இப்போது கூறிவருகிறார்கள்.
உடல் பிரச்னைகளுக்கு மட்டுமல்ல... இன்றைக்கு உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கும் சிறுதானியங்கள்தான் ஒட்டுமொத்தத் தீர்வு. சிறுதானியங்களைப் பயிரிடும் விவசாயி, சொந்தக் காலில் நிற்கிறார். சிறுதானியம், உணவுப் பாதுகாப்பை அளிக்கிறது. கால்நடைகளுக்குத் தீவனத்தையும் கொடுக்கிறது. மருத்துவச் செலவுக்கு முடிவு கட்டுகிறது, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எளியவர்களுக்கும் கிடைக்க செய்கிறது.
கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை பயிர் செய்வதற்காக நிலத்தை குடைந்து நீர் எடுக்கத் தேவையில்லை. மானாவாரியிலேயே மகசூலை அள்ளிக்கொடுத்துவிடும் அட்சய பாத்திரங்கள்தான் சிறுதானியங்கள். கடன் வாங்கி பூச்சி மருந்து, உரம் இதெல்லாம் போடத் தேவையில்லை. உங்கள் வீட்டிலும் பண்ணையிலும் கிடைக்கும் இயற்கை உரங்களே போதும்.ஆகமொத்தம் விவசாயிக்கு நஷ்டமில்லை; வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள்; நீராதாரம், நிலவளம் எதுவுமே பாதிப்பதில்லை; உயிர்ச்சூழல் கெடுவதில்லை; சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை; 'விளைச்சல் இல்லையே'என்று வேலை தேடி பட்டணத்துக்குப் போக வேண்டியதில்லை. மொத்தத்தில் விவசாயிகள் இந்த மண்ணில் மகிழ்ச்சியோடு வாழ ஒரே வழி... சிறுதானியங்கள் மட்டும்தான்" என்று அழுத்தமாகச் சொன்னார் சதீஷ்.
பாதிக்க வைத்த பருத்தியும் வெங்காயமும்!
கர்நாடகாவில் இருந்து இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு வந்திருந்த 'இந்திய&இயற்கை விவசாயக் கூட்டமைப்பு'தலைவர் பரம கவுடரு, தன்னுடைய அனுபவத்தையே சான்றாக்கிப் பேசினார்.
"நான் ஒரு மானாவாரி விவசாயி. சிறுதானியங்களை பல ஆண்டு காலமாக பயிரிட்டு வருகிறேன். ஒரு காலத்தில் சிறுதானியத்தை எட்டி உதைத்தவன்தான் நான். 1973&ம் ஆண்டு விவசாயம் செய்யத் தொடங் கினேன். அதற்கு முன்பு வரை என் தந்தை பலவிதமான தானியங்களைப் பயிரிட்டுவந்தார். நானோ, 'பருத்தியும், வெங்காயமும் போதும்'என்று பணப் பயிர்களுக்குத் தாவினேன். ரசாயனங்களைக் கொட்டினேன். விளைவு... கடன் பட்டேன். மண் வளம் இழந்தது, 1988&ம் ஆண்டு இயற்கை விவசாயத்துக்குத் திரும்பினேன். கையோடு சிறுதானியத்தையும் எடுத்துக் கொண்டேன். இப்போது என் குடும்பத்துக்குச் சத்தான உணவு கிடைக்கிறது. ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கிடைக்கிறது. சந்தோஷமாக வாழ்க்கை போகிறது" என்று சொன்னார்.
அரசே விழித்துக்கொள்!
மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் இருந்து வந்திருந்த விவசாய சங்க பிரமுகர் விஜய் ஜெய்வந்தியா, "அரசுகளின் தவறான விவசாயக் கொள்கை காரணமாக அதிக நீரினை பயன்படுத்தி விளையக்கூடிய நெல், கோதுமை இவற்றை மட்டுமே விவசாயிகள் பயிரிட்டனர். இதனால் இன்றைக்கு எல்லா வளமும் இழந்து நிற்கிறோம். 'பணம்... பணம்...'என்று ஆசைக்காட்டப்பட்டதால் விஷத்தை யும், போலி விதைகளையும் இதுநாள் வரை நாடினோம். ஆனால், சிறுதானியங்களைப் பயிரிட்டாலும் வசதியாக வாழமுடியும் என்பது தான் உண்மை. அரசு இப்போதாவது விழித்துக் கொண்டு, சிறுதானியங்களை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார் உணர்ச்சி பொங்க.
கூட்டம் முடிந்த பிறகு, ''சிறுதானியங்களை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கமுடியாது என்றுதானே ஒரு காலத்தில் அதை கை கழுவினார்கள் விவசாயிகள். இப்போது, அதை வைத்து சாதிக்கமுடியும் என்கிறீர்களே... இதை எப்படி நம்ப முடியும்?" என்று 'டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி'யின் இயக்குனர் சதீஷிடம் கேட்டோம்.
மிகவும் பொறுமையாக ஆரம்பித்தவர், "அது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான யூரியா, பூச்சிக்கொல்லி போன்றவற்றை விற்பனை செய்வதற்கு வசதியாக முதலில் சிறுதானியங்களை வழக்கொழிந்து போகச் செய்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. மீண்டும் சிறுதானியங்களை உயிர்ப்பிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தெம்பு கூட்டமுடியும் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, ஆதாரங்களை அடுக்கினார்.
சோளம் எங்கள் வேதம்!
''ஐதராபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஜகிராபாத் மண்டல். இப்பகுதியில் மழையை மட்டுமே நம்பியுள்ள 77 கிராமங்களில் 20 ஆண்டு காலமாக எங்கள் அமைப்பு பணியாற்றி வருகிறது. ஏழ்மை நிறைந்த இந்தக் கிராமங்களில் வறுமையை விரட்ட முதலில் நாங்கள் கையில் எடுத்தது சோளம்! இந்தக் கிராமங்களில் சோளம்தான் முக்கிய பயிர். முதலில் அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய சோளம் பயிரிடச் சொன்னோம். இதற்காக மூன்று ஆண்டுகள் அவர்களுக்குக் கடன் கொடுத்தோம். நிலத்தை தயார் செய்ய முதல் ஆண்டு ரூ.2,700 இரண்டாம் ஆண்டு ரூ. 1,000, மூன்றாம் ஆண்டு ரூ.500 என மொத்தம் ரூ.4,200 கொடுத்தோம்.
இதைப் பணமாகத் திருப்பித் தராமல், தானியமாக ஐந்து ஆண்டுகளில் கொடுக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தோம். முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 150 கிலோ, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் தலா 200 கிலோ கொடுக்கவேண்டும். ஒரு கிலோ ரூ.4.50 காசுக்கு எடுத்துக்கொள்கிறோம். இதைப் பொதுவிநியோக முறையின் கீழ் அந்தந்த கிராமங்களிலேயே கிலோ ரூ 3.50 காசுக்கு மக்களிடமே விற்பனை செய்கிறோம். கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் மானிய விலையில் கொடுக்கிறோம். அதிகப் படியான சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம், இதெல்லாம் எங்களுக்கு சாத்தியமாகிறது.
நடமாடும் சிறுதானியக் கடை!
இதுமட்டுமல்லாமல் நடமாடும் சிறுதானியக் கடைகளை விவசாயப் பெண்கள் நடத்தி வருகிறார்கள். சத்தான தானியங்களுக்கான உணவு விடுதியும் நடத்தப்படுகிறது. சிறுதானியங் களின் தேவை அதிகரிப்பதால் பயிரிடும் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
கிராமத்தில் உள்ளவர்கள் உணவுக்காக மட்டும் 60% பணத்தை செலவிட வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் செலவை சிறுதானியங்கள் போக்கிவிடுகிறது. சிறுதானியம் மற்றும் பயறு வகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை ஏக்கருக்கு வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. நகரத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் ஆரோக்கி யமாக வாழ்கிறார்கள். அவர்களின் மற்றச் செலவு களுக்கு போதுமான பணமும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட அவர்கள் இழந்துவிட்ட மகிழ்ச்சி திரும்பவும் இப்போது அவர்களிடம் நிலைத்து நிற்கிறது" என்றார் புன்னகை பொங்க.
அகில இந்திய சிறுதானிய நெட்வொர்க்!
கூட்டத்தின் இறுதியில், 'சிறுதானியங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டும். இதன் மகத்துவம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்'என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய 'ஐதராபாத் பேரறிக்கை'வெளியிடப் பட்டது. இந்திய அளவில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளை ஒன்று சேர்க்கும் விதமாக, 'இந்திய சிறுதானிய நெட்வொர்க்'என்கிற புதிய அமைப்பும் தொடங்கப்பட்டது.
தொடர்புக்கு:
Deccan Development SocietyPastapur village, Zaheerabad- Mandal - 502 220Medak Dist,Andhra Pradesh,Ph : 08451 - 282271, 282785web:www.ddsindia.com.