Wednesday, June 2, 2010

விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்

நன்றி தினமலர்: மே 30,2010,10:18 IST

கோவை: ""விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்'. நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது, என்று மயில்சாமி அண்ணாதுரை பேசினார். ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:


தாய்மொழிக்கல்வி தான் சிறந்தது; இந்த தாய் மொழிக்கல்வி தான் என்னை சந்திராயனுக்கு கொண்டு சென்றது. "விரும்பியது கிடைத்தால் வெற்றி பெற முடியும்'; அதே நேரத்தில் "கிடைத்ததை விரும்பினாலும் வெற்றி பெற முடியும்' . நாம் விரும்பியது கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் வருத்தப்படக் கூடாது. இந்தியாவில் கடந்தாண்டு 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 27 சதவீதம் பேர் கூட உண்மையான பொறியாளராக வருவதில்லை என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். பொறியாளர் படிப்பில் வெறும் பாடத்திட்டத்தை மட்டும் படித்தால் போதாது; முதலாம் ஆண்டில் இருந்தே செய்முறை பயிற்சி மிக அவசியம். ஒவ்வொருவரிடமும் படிப்புடன் திறமை உட்பட அதிக தகுதிகள் எதிர்பார்க்கின்றனர். அந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே சிறந்த சாதனையாளர்களாக வருகின்றனர். எந்த துறையில் சாதனை பெற்றாலும், மனித நேயத்தை மறந்து வாழக்கூடாது. சுயசிந்தனை ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுய சிந்தனையால் எதையும் சாதிக்க முடியும். பொதுநலக் கொள்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து பேசியதாவது: சாதிக்க வேண்டுமென்றால் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும். படித்தால் மட்டும் போதாது, சாதனையாளராக வரவேண்டும். அதற்கு லட்சியத்தை முன் வைக்க வேண்டும். பாடத்திட்டத்தில் மாற்றும் செய்து ஐந்து முக்கிய அம்சங்கள் அடங்கிய கல்வியை உருவாக்க வேண்டும். ஒன்று, கலாச்சாரம், பாரம்பரியம் <உள்ள பாடம் இருக்க வேண்டும். இரண்டு, அவற்றை மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று, இந்தியாவை பற்றி மாணவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு, எதிர்காலத்தில் நம்மை எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். ஐந்து, தொலை நோக்குடன் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், இந்த ஐந்து அம்சங்களை மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தான் நாடு வல்லரசாக மாறும். இன்றை இளைஞர்கள் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து வருகின்றனர். வேலைக்கு சேர்ந்ததும், அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தங்க வைக்கின்றனர். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வானவராயர் பேசினார்.


விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி வரவேற்றார். ராம்ராஜ் காட்டன் கம்பெனி உரிமையாளர் நாகராஜ், ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை தலைவர் ராமசாமி, விஜயலட்சுமி அறக்கட்டளை கல்விக்குழு தலைவர் ரங்கசாமி மற்றும் பலர் பேசினர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணிக்கராஜ், ரீனா, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி காஞ்சனா, இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் எடுத்த நான்கு விவசாயிகள் ஆகியோரை விழாவில் கவுரப்படுத்தினர். 4 ஆயிரத்து 500 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 8.75 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டது.


கோவை மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கத் தலைவர் வெள்ளிங்கிரி நன்றி கூறினார்.